Friday, July 15, 2011

சரசு அக்கா இடிக்க, நிராயுதபாணி ஆனேன் - உண்மை சம்பவம்














2008 ம் ஆண்டு என நினைக்கிறேன், இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நேரம். சமாதான காலத்தில் திறக்கப்பட்ட வடக்கையும் தெற்கையும் இணைக்கும் பாதை மூடப்பட்டது. தூரதிர்ஸ்டவசமாக கொழும்பு சென்ற அம்மாவும், அப்பாவும் இங்கு வரமுடியாமல் போக நானும், அப்பம்மாவும், இளைய சகோதரர்களும் யாழ்ப்பாணத்தில் தனிமைப்பட்டோம்.


யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதால் யாழ்ப்பாணம் எங்கும் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுலுக்கு வந்தது. வீட்டை விட்டு வெளியே வந்தால் உயிருக்கே பெரும் ஆபத்தாய் போகும் நிலை. யாழ்ப்பாண மக்களுக்கே உரிய சேமிப்பு பழக்கத்தினால் அம்மா சேமித்து வைத்த உணவுப் பொருட்களுடன் சமாளிக்க முடிந்தது.

ஓர் பத்து நாட்கள் கழிந்திருக்கும். கையிருப்பாய் இருந்த உணவுப்பண்டங்களும் குறையத் தொடங்க செய்வதறியாது திக்கித்து நின்ற வேளை தெய்வாதீனமாக நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவது நடைமுறைக்கு வந்தது.

சப்பா என்று கடைகளுக்கு விரைய ஏமாற்றம் தான் மிஞ்சியிருந்தது. கடைகள் காலியான நிலையில் பூட்டப்பட்டு இருந்தது. (பதுக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன்)

நல்லவேளை சங்கக் கடைகளில் (ரேசன் கடை) அரிசி சாமான் கொடுத்தார்கள். எப்படியாவது சாமான் வாங்கிவிடவேண்டும் என்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட உடனே சங்கக்கடைக்கு ஓடிச்சென்ற எனக்கு சப் என்று ஆகிவிட்டது.

காரணம், பெரும் கூட்டமொன்று கூடிவிட்டிருந்தது.



கூட்டமென்னடா கூட்டம்... எத்தன கோயில்களில கூட்டத்துக்க சுழிச்சுப்போய் பஞ்சாமிர்தம் வாங்கி நக்கியிருக்கிறம்.... இத விடுவமா... அப்பம்மா சாமான் வாங்க தந்துவிட்ட உரப்பையை (கோணிப்பை) இடுப்பில் செருகிவிட்டு உடலில் பலத்தை திரட்டிக்கொண்டு கூட்டத்தில் புகுந்தேன். கூட்டத்தை முட்டிச்சென்ற என்னை இன்னோர் திசையிலிருந்து முட்டி மோதி வந்த சரசு அக்கா வந்த வேகத்தில் இடித்தார். அவர் இடித்தவுடன் இடுப்பில் இருந்து ஏதோ கழன்று விழுந்தது போல இருந்தது.

கழன்றது வேறு ஒன்றுமில்லை என்ட கோணிப்பை தான். அதை குனிந்து எடுப்பதுக்குள் காட்டெருமையின் காலில் சிக்கிய தக்காளி போல் கூட்ட நெரிசலில் மிதிபட்டு வீணாய் போனது.

அந்த இடைவெளியில் நான் சங்கக்கடை மனேச்சருக்கு அருகில் கோணிப்பை இல்லாமல் நிராயுத பாணியாக போய் சேர்ந்துவிட்டேன்.

அப்போது பில் புத்தகத்தை மூடியபடி எழுந்த மனேச்சர் "தம்பி, சங்கத்தில சாமான் முடிஞ்சு போச்சு, இனி நாளைக்கு லொறி வரத்தான் சாமான் குடுக்கலாம். இன்டைக்கு போட்டு நாளைக்கு வா" என்றார்.

அந்தக் கணம், சேனைகள், ஆயுதங்கள், பரிவாரங்கள் அனைத்தையும் இழந்து நிராயுதபாணியாக நின்ற சூரனிடம், முருகப்பெருமான் 'இன்று போய் நாளை வா' என்று கூறியபோது சூரனுக்கு இருந்த மனோ நிலை தான் எனக்கும்.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

அதிகம் பார்க்கப்பட்டவை